Saturday, February 13, 2010

வேறென்ன செய்ய?!

சமீபத்தில் ஒரு திங்கட்கிழமை நாள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் செய்திக்காக சக செய்தியாளர்களுடன் மரத்தடியில் காத்துக் கிடந்த போது திடீரென உறவினர் ஒருவர், "மாப்ள!" என்றழைத்த படியே என் முன்னால் தோன்றினார். மீண்டும் அவரே, "கலெக்டர பாத்து ஒரு மனு குடுக்கலாம்னு வந்தங்க" என்றார். "ஏங்க என்ன பிரச்னை?" என்றேன். "இந்தக் கல்விக் கடனுக்குத் தான் நடையா நடக்கறேன், ஒன்னும் வேலையாவ மாட்டங்குதுங்க மாப்ள" என்றார் சலிப்புடன். "சரி போய் மனு குடுத்துட்டு வாங்க, இங்கயேதான் இருப்பேன்" எனக் கூறி அனுப்பி வைத்தேன். திரும்பி வந்தவர், " இது நாலாவது மனுவுங்க மாப்ள!" எனக் கூறிய படியே விரிவாக புலம்ப ஆரம்பித்தார். அதன் சாராம்சம் இதுதான், ஒரு ஏக்கர் விவசாய பூமியைச் செந்தமாக கொண்ட ஏழை விவசாயியான அவருக்கு தன் மகனை பொறியியல் கல்வி படிக்க வைக்க ஆசை (யாரை விட்டது…?!). கல்லூரியில் இடம் கிடைத்து, சேர்த்தும் விட்டார். 'அரசு கோடிக்கணக்கில் (!) கல்விக் கடன் வழங்குவதாக அறிவிக்கிறதே நம்ம பையனுக்கும் வாங்கி படிக்க வெச்சுருவோம்' என்று மனு செய்திருக்கிறார். மாவட்ட முன்னோடி வங்கியில் இருந்து கடிதமும் வந்தது. அதை எடுத்துக் கொண்டு ஆவலுடன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மேலாளருக்கு வணக்கம் போட்டு கடிதத்தை காண்பித்திருக்கிறார். அவரோ அதே மாதிரி கடிதம் அவருக்கு முன்பாக தனக்கு வந்துவிட்டதை உறுதிப்படுத்தி விட்டு, 'நீங்க போய்ட்டு அடுத்த வாரம் வாங்க' எனக் கூறி வந்த வழியே திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் சென்று கேட்டவருக்கு 'அடுத்த வருஷம் வாங்கிக்குங்களேன்' என சமாதானம் கூறி அனுப்பி விட்டார் வங்கி மேலாளர். உடனே மீண்டும் ஒரு மனு தயாரித்து ஒரு திங்கட்கிழமை நாள் கூட்டத்தில் தனது குறையை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு வைத்துள்ளார். மீண்டும் முன்னோடி வங்கியில் இருந்து வந்த பரிந்துரைக் கடிதத்துடன் வங்கி மேலாளரை பார்க்கச் சென்றவரை, 'கலெக்டர்கிட்ட போய் சொன்னா மட்டும் குடுத்துடுவமா?' என வங்கி மேலாளர் தன் அதிகாரத்தை நிலைநாட்ட இவருக்கு ரத்தக் கொதிப்பு வந்து விட்டது. 'நீயா? நானான்னு ? பாக்காம விடமாட்டேன்னு' இவர் மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு மனு என இறங்க தற்போது நான்காவது முறையாக மனுவுடன் வந்திருக்கிறார். ஆட்சியரின் பரிந்துரை மீது வங்கி மேலாளரின் பார்வை என்ன என்பதை குறிப்பிட்டு மனு வழங்கியும் வழக்கம் போல் மனுவை வாங்கி மாவட்ட முன்னோடி வங்கிக்கு பரிந்துரைத்து விட்டு அவர்கள் பணியை முடித்துக் கொண்டது மாவட்ட நிர்வாகம். ஆனால் ஊராட்சி அளவில் முகாம்கள் நடத்தி கல்விக் கடன் வழங்குவதாக நாளொரு மேனியும் வெளிவரும் செய்திகளுக்கு மட்டும் பஞ்சமில்லை. மத்திய நிதியமைச்சர் முதற்கொண்டு, 'எவ்வித பிணையும் இல்லாமல் கல்விக் கடன் வழங்கப்படும்' என சற்று ஆவேசமாகவே அறிக்கையெல்லாம் விட்டார். ஆனால் உள்ளூர் வங்கி மேலாளர்களிடம் யாருடையா பாச்சாவும் பலிக்கவில்லை!

இந்த மனுவும் எதுவும் செய்யாது என்பதை உணர்ந்திருந்த உறவினர், " இப்பிடியே, யாரு சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறானே அந்த மேனேஜர், அவனா என்னாதான் பண்றது மாப்ள?" என்றார். சுற்றியிருந்த சக செய்தியாளர்களுடன் நானும் சேர்ந்து மையமாக சிரித்து வைத்தேன். பின் சில ஜனநாயக ரீதியிலான போராட்ட வழிமுறைகளைக் கூறினேன். அதற்கு அவர் தயாராயில்லை. ஆனாலும் ஆத்திரம் அடங்காமல் " அவன ஒன்னுமே பண்ணமுடியாதா மாப்ள?, அவன எதாச்சும் பண்ணனும் மாப்ள!" என்றவரை தனியாக அழைத்துச் சென்று, "அவரு வேல முடிஞ்சு வரும் போது ஆள் வெச்சு அடிச்சு, மண்டைய ஒடைச்சிடுங்க!" என்றேன்.