Showing posts with label படைப்பு.. Show all posts
Showing posts with label படைப்பு.. Show all posts

Saturday, December 21, 2013

குத்து வாங்கிய புலி!

கடந்த இருவாரங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை, சேனலில் மேய்ந்துகொண்டிருந்தபோது U TV Action-ல் 'ஹிம்மத்வாலா' என்ற பெயர் தென்பட்டது. அட அதற்குள் TV-க்கு வந்துவிட்டதா? என ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். ஏனெனில் இந்த படத்தைப்பற்றி வெள்ளிக்கிழமை சினிமா மலர்களில் பக்கம் பக்கமாக எழுதியிருந்தார்கள். அவை எல்லாவற்றையும்விட இதில் தமனா நடித்திருப்பது தான் எதிர்பார்ப்புகளின் எகிறலுக்கு காரணம்.
நான் பார்த்தபோது தமனா, பார்பி டால் ரேஞ்சில் குட்டைப்பாவாடையுடன், கண்களில் மரண பயத்துடன் நின்றுகொண்டிருந்தார். காற்று லேசாக வீசியதில் அவரது குட்டைப்பாவாடை வேறு லேசாக மேலே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.
அப்போது, அவர் முன் ஒரு புலி உறுமியபடி நின்று கொண்டிருந்தது. அந்தப்புலி தமனா மீது பாய முற்படும்போது அஜய்தேவ்கன் (ஹீரோ!) என்ட்ரியாகிறார்.
அதன்பின் அஜய்தேவ்கனுக்கும் புலிக்கும் இடையே கடும் மோதல் நடக்கிறது. இருவரும் கட்டிப்புரண்டு, குடிசையின் கூரையையெல்லாம் பிய்த்துக்கொண்டு சண்டையிடுகின்றனர். அப்போது புலி அஜய் தேவ்கனின் கழுத்தில்  அறைந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுவிடுகிறது.
இதனால் ஆக்ரோஷமடைந்த அஜய்தேவ்கன் பாய்ந்து வந்த புலியின் தாடையில் ஓங்கி ஒரு குத்துவிடுகிறார். அதில் புலி உருண்டோடி விழுந்து பின் எழுந்து சென்று சற்றுத் தள்ளி அமைதியாகப் படுத்துவிட்டது. அதன்பின் சாவகாசமாக அஜய்தேவகன் அதன் அருகில் சென்று அமர்ந்து கேஷுவலாகப் பேசுகிறார். என்ன பேசினாரோ தெரியவில்லை (நமக்கு ஹிந்தி தெரிஞ்சாத்தானே!)அந்தப் புலி அமைதியாக எழுந்து வாலைச் சுழற்றியபடி சென்றுவிட்டது.
இதற்குமேல் நான் அந்தப் படத்தைப் பற்றி விவரித்து உங்கள் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது என்னவென்றால், நீங்கள் எப்போதெல்லாம் மூட்-அவுட்டாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்தப் படத்தை பாருங்கள், உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுவீர்கள்!  இப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாளுக்கு இருமுறை வீதம் ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நான்பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!

Tuesday, June 18, 2013

பழனிபாரதியான பாலுமகேந்திரா !

கடந்த 16ம் தேதி இரவு தந்தி டி.வியில் சினிமா குறித்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நங்கை இயக்குனர் பாலுமகேந்திரா ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்தை தெரிவித்தார். அதன் பின் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசிய காட்சி ஒளிபரப்பானது. அப்போது அவர் முன் விரிந்த எழுத்து பட்டையில் “பழனிபாரதி, பாடலாசிரியர்” என குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு முறை அதே எழுத்து பட்டை திரையில் ஒளிர்ந்து மறைந்தது. பாலுமகேந்திராவிற்கும் பழனிபாரதிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை வேலைக்கு வைத்து கொள்வது அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதையெல்லாம் பார்த்து தொலைய வேண்டிய நேயர்களின் நிலையை என்னவென்று சொல்வது?

ஆத்மா சாந்தியடையட்டும் !


சில விஷயங்களை நம்ப முடிவதில்லை. அப்படித்தான் கடந்த 15ம் தேதி இயக்குனர் மணிவண்ணன் காலமானார் என்ற செய்தி தொலைக்காட்சியில் வெளியான போது நம்ப முடியாமல் ஒன்றுக்கு பல முறை மீண்டும் மீண்டும் அதை தொலைக்காட்சியில் பார்த்து உறுதி செய்ய வேண்டியிருந்தது. 59 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த அவர் தனது 50வது படத்துடன் பிரியாவிடை பெற்று சென்றுவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் தனது 50வது திரைப்படம் குறித்து வாரப்பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ’ரிட்டையர் ஆகும் போது பாராட்டாதீங்க’ என வலியுடன் குறிப்பிட்டிருந்தார். (அது குறித்த இடுகை ஒன்றும் வெளியிடப்படிருந்தது) பொதுவாக படைப்பாளிகளுக்கு அவர்களது மூச்சு நிற்கும் வரை ரிட்டையர்மெண்ட் என்பது  கிடையாது.

ஒருவேளை தனது ரிட்டையர்மெண்ட் குறித்து முன்கூட்டியே உணர்ந்து தான் அந்த பேட்டியில் அப்படி சொன்னாரோ என்னவோ?. எது எப்படியோ, இயக்குனர் மணிவண்ணனின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பெரும் இழப்புதான் !.  அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.!