Saturday, December 21, 2013

குத்து வாங்கிய புலி!

கடந்த இருவாரங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை, சேனலில் மேய்ந்துகொண்டிருந்தபோது U TV Action-ல் 'ஹிம்மத்வாலா' என்ற பெயர் தென்பட்டது. அட அதற்குள் TV-க்கு வந்துவிட்டதா? என ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பித்தேன். ஏனெனில் இந்த படத்தைப்பற்றி வெள்ளிக்கிழமை சினிமா மலர்களில் பக்கம் பக்கமாக எழுதியிருந்தார்கள். அவை எல்லாவற்றையும்விட இதில் தமனா நடித்திருப்பது தான் எதிர்பார்ப்புகளின் எகிறலுக்கு காரணம்.
நான் பார்த்தபோது தமனா, பார்பி டால் ரேஞ்சில் குட்டைப்பாவாடையுடன், கண்களில் மரண பயத்துடன் நின்றுகொண்டிருந்தார். காற்று லேசாக வீசியதில் அவரது குட்டைப்பாவாடை வேறு லேசாக மேலே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.
அப்போது, அவர் முன் ஒரு புலி உறுமியபடி நின்று கொண்டிருந்தது. அந்தப்புலி தமனா மீது பாய முற்படும்போது அஜய்தேவ்கன் (ஹீரோ!) என்ட்ரியாகிறார்.
அதன்பின் அஜய்தேவ்கனுக்கும் புலிக்கும் இடையே கடும் மோதல் நடக்கிறது. இருவரும் கட்டிப்புரண்டு, குடிசையின் கூரையையெல்லாம் பிய்த்துக்கொண்டு சண்டையிடுகின்றனர். அப்போது புலி அஜய் தேவ்கனின் கழுத்தில்  அறைந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுவிடுகிறது.
இதனால் ஆக்ரோஷமடைந்த அஜய்தேவ்கன் பாய்ந்து வந்த புலியின் தாடையில் ஓங்கி ஒரு குத்துவிடுகிறார். அதில் புலி உருண்டோடி விழுந்து பின் எழுந்து சென்று சற்றுத் தள்ளி அமைதியாகப் படுத்துவிட்டது. அதன்பின் சாவகாசமாக அஜய்தேவகன் அதன் அருகில் சென்று அமர்ந்து கேஷுவலாகப் பேசுகிறார். என்ன பேசினாரோ தெரியவில்லை (நமக்கு ஹிந்தி தெரிஞ்சாத்தானே!)அந்தப் புலி அமைதியாக எழுந்து வாலைச் சுழற்றியபடி சென்றுவிட்டது.
இதற்குமேல் நான் அந்தப் படத்தைப் பற்றி விவரித்து உங்கள் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அது என்னவென்றால், நீங்கள் எப்போதெல்லாம் மூட்-அவுட்டாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்தப் படத்தை பாருங்கள், உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுவீர்கள்!  இப்போதும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாளுக்கு இருமுறை வீதம் ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நான்பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!

Saturday, November 2, 2013

வாழ்த்து!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Tuesday, June 18, 2013

பழனிபாரதியான பாலுமகேந்திரா !

கடந்த 16ம் தேதி இரவு தந்தி டி.வியில் சினிமா குறித்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நங்கை இயக்குனர் பாலுமகேந்திரா ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்தை தெரிவித்தார். அதன் பின் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசிய காட்சி ஒளிபரப்பானது. அப்போது அவர் முன் விரிந்த எழுத்து பட்டையில் “பழனிபாரதி, பாடலாசிரியர்” என குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு முறை அதே எழுத்து பட்டை திரையில் ஒளிர்ந்து மறைந்தது. பாலுமகேந்திராவிற்கும் பழனிபாரதிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை வேலைக்கு வைத்து கொள்வது அந்த நிறுவனத்தின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதையெல்லாம் பார்த்து தொலைய வேண்டிய நேயர்களின் நிலையை என்னவென்று சொல்வது?

ஆத்மா சாந்தியடையட்டும் !


சில விஷயங்களை நம்ப முடிவதில்லை. அப்படித்தான் கடந்த 15ம் தேதி இயக்குனர் மணிவண்ணன் காலமானார் என்ற செய்தி தொலைக்காட்சியில் வெளியான போது நம்ப முடியாமல் ஒன்றுக்கு பல முறை மீண்டும் மீண்டும் அதை தொலைக்காட்சியில் பார்த்து உறுதி செய்ய வேண்டியிருந்தது. 59 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த அவர் தனது 50வது படத்துடன் பிரியாவிடை பெற்று சென்றுவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் தனது 50வது திரைப்படம் குறித்து வாரப்பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ’ரிட்டையர் ஆகும் போது பாராட்டாதீங்க’ என வலியுடன் குறிப்பிட்டிருந்தார். (அது குறித்த இடுகை ஒன்றும் வெளியிடப்படிருந்தது) பொதுவாக படைப்பாளிகளுக்கு அவர்களது மூச்சு நிற்கும் வரை ரிட்டையர்மெண்ட் என்பது  கிடையாது.

ஒருவேளை தனது ரிட்டையர்மெண்ட் குறித்து முன்கூட்டியே உணர்ந்து தான் அந்த பேட்டியில் அப்படி சொன்னாரோ என்னவோ?. எது எப்படியோ, இயக்குனர் மணிவண்ணனின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பெரும் இழப்புதான் !.  அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.!

Wednesday, May 8, 2013

எல்லாமே லேட்டஸ்ட்!


தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வரும் முதியவருக்கு அவரது செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அழைத்த குரல், தான் ஒரு தனியார் செல்போன் நிறுவன அலுவலர் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது தோட்டத்தின் ஒரு பகுதியில் தங்கள் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்க இடம் தந்தால் வாடகையாக மாதம் ரூ.8 ஆயிரம் தருவதாக கூறியது. அடுத்த நாள் மிடுக்காக ஒரு நபர் பைக்கில் வந்து இறங்கினார். அந்த முதியவரை அழைத்து கொண்டு அவரது வீட்டிற்கு அருகிலேயே உள்ள அவரது  விவசாய நிலத்தில் உள்ள காலியிடத்தை பார்வையிட்டார். பின்னர் அந்த இடத்தில் செல்போன் சிக்னல் நன்றாக கிடக்கிறதா என பார்ப்பதற்காக ஒரு குழி தோண்டி தான் அணிந்திருந்த செயின், மோதிரம் ஆகியவற்றை அதில் போட்டு மூடிவிட்டு தன் செல்போனை எடுத்து சிக்னல் போதுமான அளவிற்கு கிடைக்கிறதா என பார்த்துள்ளார்.

தொடர்ந்து அங்கு சரியாக சிக்னல் கிடைக்கவில்லை என கூறிய அந்த நபர், நில உரிமையாளரிடம் இன்னும் கொஞ்சம் நகை இருந்தால் கொடுங்கள் சிக்னல் சரியாக கிடைக்கிறதா என சோதித்து பார்க்கலாம் என கேட்டுள்ளார். உடனடியாக அவரும்  தான் அணிந்திருந்த மோதிரம் மட்டுமில்லாமல் வீட்டிலிருந்த 7 பவுன் செயின் ஒன்றையும் எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதையும் குழியில் போட்டு மூடி சோதனை செய்த அந்த நபர் இங்கு சரியாக சிக்னல் கிடைக்கவில்லை. அதனால் வேறு இடத்தில் சோதனை செய்து பார்க்கலாம் எனக் கூறி அவரது நிலத்திலேயே சற்று தள்ளி வேறு ஒரு இடத்தில், நில உரிமையாளரையே குழி பறிக்க கூறியுள்ளார். அந்த முதியவரும் அங்கு குழி தோண்டியுள்ளார். அவர் கொஞ்சம் குழி தோண்டிய நிலையில் போன் பேசியபடியே  அவரருகில் வந்த அந்த நபர், முதியவரிடம் தன்னுடைய உயரதிகாரி வந்திருப்பதாகவும், வழி தெரியாமல் மெயின் ரோட்டில் நிற்கும் அவரை தான் சென்று அழைத்து வருவகிறேன் நீங்கள் குழி தோண்டி கொண்டிருங்கள் என கூறி சென்றுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் சென்றவர் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், ஏற்கனவே மூடிய குழிக்குள் இருக்கும் நகையை எடுக்க நினைத்து அந்த குழியை தோண்டி பார்த்தார். ஆனால் அதற்குள் எந்த நகையும் இல்லை. அப்போது தான் அவர், தான் சற்று தள்ளி புதிதாக குழி தோண்டிக் கொண்டிருந்தபோது அந்த நபர் குழிக்குள் போட்டு மூடப்பட்டிருந்த நகைகளை சுருட்டிக் கொண்டு சென்றதை உணர்ந்துள்ளார்.

காவல் நிலையத்தில் புகார் கொடுத்து என்ன செய்வது? நகையுடன் சிட்டாய் பறந்தவன் எங்கிருக்கிறானோ? 8 பவுன் நகையை பறிகொடுத்த அந்த முதியவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் என்பதை இங்கு சொல்லாமல் விட்டால் இந்த இடுகை நிறைவடையாது!.

Tuesday, January 22, 2013

ரிட்டயர் ஆகும்போது பாராட்டாதீங்க!


ஒரு படைப்பாளி வாரப் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியின் முடிவில் கூறியிருந்த வலி நிறைந்த வார்த்தைகள் தான் இந்த இடுகைக்கான துவக்கம்.  அந்த படைப்பாளி, திரைப்பட இயக்குநர் மணிவண்ணன். கோபுரங்கள் சாய்வதில்லை, இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், சின்னத்தம்பி பெரியதம்பி என வெரைட்டியான வெற்றிகளை தந்தவர். சுமார் 36 படங்களை இயக்கிவிட்டு தற்போது மீண்டும் அடுத்த படத்தை துவக்கியுள்ளார்.

அதையொட்டி  இவர் சமீபத்தில் ஒரு வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் கடைசியில், ‘ஒரு கலைஞனை சாந்தமான மனநிலையில் செயல்பட விட்டாலே போதும். அருமையா படம் பண்ற நேரத்துல எல்லாம் விமர்சனம்னு தொந்தரவு பண்ணிட்டு, ரிட்டயர் ஆகும்போது பாராட்டாதீங்க. அது தான் முக்கியம்’ என முடித்திருந்தார். ஒரு கலைஞனின் வலி நிறைந்த வார்த்தைகள் அவை.

கலைஞனின் மனது எப்போதும் ஏங்குவது கைதட்டலுக்கு மட்டும் தான் என்பது இவரது வார்த்தைகள் மூலம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மட்டுமே நினைக்காமல் கடந்த காலங்களையும் கொஞ்சம் நினைத்தால் என்ன ?