Sunday, December 27, 2009

ஒரே ஒரு கேள்வி !

கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் சூரியச் செய்தியில் சென்னை மறைமாவட்ட பேராயரின் வாழ்த்துக்களை வாங்கிக் கொண்டு அப்படியே வேறு சேனல்களில் மேயத் துவங்கிய போது பொதிகை கண்ணில் பட்டது. அதைச் தாவிச் செல்ல விடாமல் ஹரிஹரனும் லெஸ்லியும் 'கலோனியல் கசின்ஸ்' ஆக 'கிருஷ்ணா நீ பேகனே…' என கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் தேனாய் கலந்து காதில் ஊற்றிய அந்தப் பாடலுக்கு ஒரு ஆண் பரதம் ஆடிக் கொண்டிருந்தார். பெயர் தெரியவில்லை, சுமாராக இருந்தது: ஆனால் நல்ல கற்பனை வளம். அந்தப்பாடல்-நடனக் காட்சி முடிந்தவுடன் பட்டுப் புடவையுடன் ஒரு பாவை தோன்றி, The Next Song, Maathaa… Paraashakthi… is என குயிலாய் கூவினார். அடுத்து ஆங்கிலத்தில் அந்தப் பாடலின் ராகம், தாளம் பற்றிய குறிப்பு அட்டையும் (ஒரே ஒரு வினாடிதான்) காண்பிக்கப்பட்டது. பின் 'மாதா…பராசக்தி…வையமெல்லாம் நிறைந்திருப்பாய்…' என தமிழில் ஒலித்த அந்தப் பாடலுக்கு கொஞ்சம் வயதான ஆணும் பெண்ணும் ஆடத் துவங்கினர். ஆடலும் பாடலும் முடிந்தவுடன் A Dhoordharshan Presnsentation என ஆங்கிலத்தில் எழுத்துப் போட்டார்கள்.

உடனடியாக என்னுள் தோன்றிய கேள்வி, 'உங்கொய்யால, சென்னை என்ன இங்கிலாந்துலயாடா இருக்குது?'

Friday, December 25, 2009

நன்றிகள்!

நான் ப்ளாக் ஆரம்பிக்க உந்துதலாகவும் துணையாகவும் இருந்து எனது எழுத்துக்கு முதல் கமெண்ட் எழுதியவருனமான திரு. சாய் சார் அவர்களுக்கும் தொழில்நுட்ப ரீதியாக உதவியும் ப்ளாகில் எழுத துவங்கிய என்னை முதலில் வரவேற்று அவரது வலைப்பூவில் வரவேற்பு உரை எழுதி ஊக்குவித்த சக பத்திரிக்கையாளரான தோழர். இரா.சிந்தன் அவர்களுக்கும் எனது நன்றிகள்!

Thursday, December 24, 2009

எண்டர்டெய்ன்மெண்ட்!

இதைப் படிக்கு நண்பர்கள் நிச்சயம் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனம் ஒன்றிற்கு உரிமையாளராயிருப்பீர்கள். நீங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது நிச்சயம் இதை அனுபவித்து இருப்பீர்கள். இல்லையெனில் அடுத்தமுறை பயணிக்கும் போது நிச்சயம் கவனித்துப் பாருங்கள். அதாவது நீங்கள் உங்களது வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது உங்கள் பின்னால் வரும் வாகனம் ஒன்றிலிருந்து இடைவிடாது ஹாரன் ஒலித்துக் கொண்டேவரும். இதில் சில கிக்கிகிக்கீ……கிக்கீ……கிக்கிகிக்கீ……. என ரிதமிக்காகவும் கேட்கும். உடனடியாக நீங்கள்,'ஏதோ நாம் நடு ரோட்டிற்கு சென்று விட்டோமோ?' என சந்தேகித்து சட்டென்று உங்கள் வாகனத்தை ஒதுக்கி வழிவிட்டாலும் மீண்டும் உங்கள்----க்குப் பின்னால் அதேபோல் ஹாரன் அடிக்கும். அது நீங்கள் பசியில் இருக்கும் நேரமாக இருந்து, நீங்கள் உடனடியாக உங்கள் வாகனத்தின் வேகத்தைக் குறைந்து, சாலையின் விளிம்பிற்கு அதை ஒதுக்கி, லேசாக குனிந்து ரியர்வியூ மிரரில் ஒரு முறைப்பு முறைத்தீர்களானால் அப்போதைக்கு ஹாரன் அடிப்பது நிற்கும். அதற்கு பின்னும் உங்கள் பின்னால் வருவது நல்லதல்ல என்பதை உணர்ந்து, உங்களை முந்திச் சென்ற பின் அவருக்கு முன்பாகவும் வேறு வாகனங்களே இல்லையென்ற போதும் மீண்டும் ரிதமிக்காக ஹாரன் அடித்துக் கொண்டே ஒன்றுமே தெரியாதவர் போல் செல்வார்கள். அப்போது செம்மறி ஆடு உங்கள் ஞாபகத்திற்கு வந்தால் உண்மையிலேயே உங்களுக்கு 'ஐக்யூ' அதிகம் என்பதற்கு வேறெந்த நிரூபணமும் தேவையில்லை!.

நீங்கள் இதுவரை இப்படி ஒரு அனுபவம் வாய்க்கப்பெறாதவராயிருந்தால் அடுத்த பயணத்தின் போது கூர்ந்து கவனித்துப் பாருங்கள், அது பயணத்தின் போது உங்களுக்கு ஒரு நல்ல எண்டர்டெய்ன்மெண்ட்டாகவும் இருக்கும்!

Wednesday, December 23, 2009

உயர்ந்த லட்சியம்!

சென்ற வாரம் 'கண்களுக்கு குளிர்ச்சியான' ஒரு வீக் என்டு வேளையில் கோவையில் இருந்து ஈரோட்டிற்கு அரசு பேருந்து ஒன்றில் ஏறினேன். பேருந்தில் நான்தான் முதல் ஆள். பின் சில நிமிடங்களில் ஒரு பெண்மணியும் கல்லூரியில் படிக்கும் அவரது மகளும் பேருந்தில் ஏறினர். ஏறும் போதே அப்பெண்மணி தனது மகளிடம்,'வேற பிரைவேட் பஸ் எதுவுமில்லையா?' எனக் கேட்டுக் கொண்டே ஏறினார். அதற்கு அவரது மகள்,'இல்லை. அதுவுமில்லாம அவன் வேகமாப் போவான்' என பதிலுரைத்தார். ஆனாலும் தன் மகள் கூறிய அப்பதிலில் திருப்தியடையாத அந்த தாய் முன் இருக்கையில் பெட்டி படுக்கைகளுடன் அமர்ந்த பின்னும் பேருந்தை விட்டு கீழிறங்கி 'வேற பிரைவேட் பஸ் ஏதாவது கண்ணில் படுகிறதா?' என ஒரு சுற்று பார்த்து விட்டு தான் மீண்டும் பேருந்தில் வந்தமர்ந்தார்.

இந்த ஒரு சின்ன விஷயத்தில் கூட அரசை ஆதரிக்க தயாராயில்லாத இவர்களைப் போன்றோருக்கு 'புள்ள படிப்ப முடிச்சதும் காசு கொடுத்தாவது கவர்மெண்டு வேலை வாங்கிடனும்!' என்ற 'உயர்ந்த லட்சியம்' மட்டும் உண்டு.

Tuesday, December 22, 2009

வெளங்குமாய்யா!?

சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் சின்னஞ்சிறு கதை ஒன்று படித்தேன். அதில் வேலை விஷயமாக ஒரு வாராம் வெளியூர் செல்ல தயாராகும் கணவன் மனைவியை 'படுக்கைக்கு' அழைக்கிறான். வழக்கமாக 'ஒத்துழைக்கும்' மனைவி அன்று மறுக்கிறாள். அதற்கு அவள் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் காரணம், இன்று அவனுக்கு 'ஒத்துழைத்து' விட்டால் ஆற அமர வேலையை முடித்து விட்டு சரியாக ஒருவாரத்திற்கு பின் தான் வருவானாம். அதனால் இப்போது 'ஒத்துழைப்பு' தராமல் 'பசியோடு' அனுப்பினால்தான் மூன்று, நான்கு நாட்களில் சீக்கிரம் வேலையை முடித்து விட்டு 'பசியோடு' பறந்து வருவானாம்.

இதைப் படித்தவுடன் எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான், 'அந்த வேலையும் கம்பெனியும் வெளங்குமாய்யா?'(இதை மட்டும் திரு. சாலமன்பாப்பையா-வின் மாடுலேஷனில் மறுவாசிப்பு செய்து கொள்ளுங்கள்!)

Monday, December 21, 2009

நல்ல முன்னேற்றம்!

தற்போது டி.வி-யில் வரும் 'ஆக்ஸ் பூஸ்ட்' என்ற பாடிஸ்ப்ரே-வின் விளம்பரத்தை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதில் அந்த திரவியத்தின் வாசனையில் மயங்கிய இளம்வயது பெண் லிப்டில் உடன் வரும் பையனை பலாத்காரம் செய்து விடுகிறாள். மற்றொரு தளத்தில் லிப்ட் நின்றவுடன் அந்தப் பெண் வெளியேறிவிட மீண்டும் அதில் ஏற வரும் நடுத்தர வயது பெண்மணியும் அந்தப் பையனை கிறக்கத்துடன் பார்க்க அத்துடன் அவ்விளம்பரம் முடிந்து விடுகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் ஆங்கிலச் சேனல் ஒன்றில் (WB) முதல் பெண் வெளியேறியவுடன் வரும் ஒரு ஆணும் அதற்கடுத்த விளம்பர இடைவேளையில் அறுபது வயது கிழவியுமெல்லாம் வந்து அந்தப் பையனை கிறக்கத்துடன் பார்க்கிறார்கள். நல்ல முன்னேற்றந்தான்! (ஆங்கிலச் சேனலில் மட்டும்தான் இந்த அரிய வாய்ப்பு என்பதை நினைவில் கொள்க!)

Saturday, December 19, 2009

முதல் வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்! நான் தமிழ்நாளிதழ் ஒன்றில் செய்தியாளனாக பணியாற்றி வருகிறேன். என்னைப் போன்று தினமும் செய்திகளைத் தேடி ஓடிக் கொண்டே இருக்கும் செய்தியாளனால் ப்ளாக்கில் பெரிதாக ஒன்றும் எழுதிவிட முடியாது என்பது என் கருத்து. ஒருவேளை இது எனது சோம்பேறித்தனத்திற்கு நானாக கூறிக் கொள்ளும் சாக்காக கூட இருக்கலாம். எது எப்ப்டி இருந்தாலும் சரி 'நானும் ப்ளாக்கர் தான்(!)' என 'என்றென்றும் அன்புடன்…' எழுத ஆரம்பித்துள்ளேன். இதைப் படிக்கும் நண்பர்களையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

Friday, December 18, 2009

வணக்கம்!விரைவில் சந்திப்போம்.