தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில்
தனது தோட்டத்து வீட்டில் வசித்து வரும் முதியவருக்கு அவரது செல்போனில் ஒரு அழைப்பு
வந்தது. அழைத்த குரல், தான் ஒரு தனியார் செல்போன் நிறுவன அலுவலர் என அறிமுகப்படுத்திக்
கொண்டு அவரது தோட்டத்தின் ஒரு பகுதியில் தங்கள் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்க
இடம் தந்தால் வாடகையாக மாதம் ரூ.8 ஆயிரம் தருவதாக கூறியது. அடுத்த நாள் மிடுக்காக ஒரு
நபர் பைக்கில் வந்து இறங்கினார். அந்த முதியவரை அழைத்து கொண்டு அவரது வீட்டிற்கு அருகிலேயே
உள்ள அவரது விவசாய நிலத்தில் உள்ள காலியிடத்தை
பார்வையிட்டார். பின்னர் அந்த இடத்தில் செல்போன் சிக்னல் நன்றாக கிடக்கிறதா என பார்ப்பதற்காக
ஒரு குழி தோண்டி தான் அணிந்திருந்த செயின், மோதிரம் ஆகியவற்றை அதில் போட்டு மூடிவிட்டு
தன் செல்போனை எடுத்து சிக்னல் போதுமான அளவிற்கு கிடைக்கிறதா என பார்த்துள்ளார்.
தொடர்ந்து அங்கு சரியாக
சிக்னல் கிடைக்கவில்லை என கூறிய அந்த நபர், நில உரிமையாளரிடம் இன்னும் கொஞ்சம் நகை
இருந்தால் கொடுங்கள் சிக்னல் சரியாக கிடைக்கிறதா என சோதித்து பார்க்கலாம் என கேட்டுள்ளார்.
உடனடியாக அவரும் தான் அணிந்திருந்த மோதிரம்
மட்டுமில்லாமல் வீட்டிலிருந்த 7 பவுன் செயின் ஒன்றையும் எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
அதையும் குழியில் போட்டு மூடி சோதனை செய்த அந்த நபர் இங்கு சரியாக சிக்னல் கிடைக்கவில்லை.
அதனால் வேறு இடத்தில் சோதனை செய்து பார்க்கலாம் எனக் கூறி அவரது நிலத்திலேயே சற்று
தள்ளி வேறு ஒரு இடத்தில், நில உரிமையாளரையே குழி பறிக்க கூறியுள்ளார். அந்த முதியவரும்
அங்கு குழி தோண்டியுள்ளார். அவர் கொஞ்சம் குழி தோண்டிய நிலையில் போன் பேசியபடியே அவரருகில் வந்த அந்த நபர், முதியவரிடம் தன்னுடைய
உயரதிகாரி வந்திருப்பதாகவும், வழி தெரியாமல் மெயின் ரோட்டில் நிற்கும் அவரை தான் சென்று
அழைத்து வருவகிறேன் நீங்கள் குழி தோண்டி கொண்டிருங்கள் என கூறி சென்றுள்ளார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு
மேலாகியும் சென்றவர் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், ஏற்கனவே மூடிய குழிக்குள்
இருக்கும் நகையை எடுக்க நினைத்து அந்த குழியை தோண்டி பார்த்தார். ஆனால் அதற்குள் எந்த
நகையும் இல்லை. அப்போது தான் அவர், தான் சற்று தள்ளி புதிதாக குழி தோண்டிக் கொண்டிருந்தபோது
அந்த நபர் குழிக்குள் போட்டு மூடப்பட்டிருந்த நகைகளை சுருட்டிக் கொண்டு சென்றதை உணர்ந்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
கொடுத்து என்ன செய்வது? நகையுடன் சிட்டாய் பறந்தவன் எங்கிருக்கிறானோ? 8 பவுன் நகையை
பறிகொடுத்த அந்த முதியவர் சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் என்பதை
இங்கு சொல்லாமல் விட்டால் இந்த இடுகை நிறைவடையாது!.