Friday, March 19, 2010

பிடி கத்தரிக்காய்!

தற்போது நாட்டில் பெட்ரோல்-டீசல் விலைஉயர்வு, நித்யானந்தா, கல்கி பகவான், மகளிர் மசோதா, பென்னாகரம் இடைத் தேர்தல் என்ற பரபரப்புகளுக்கிடையில் "பி. டி. கத்தரிக்காய்" சற்று பின் தங்கி விட்டது. இந்த நேரத்தில் அதைப் பற்றி பேசுவது சற்று பொருத்தமற்று தோன்றினாலும் பேச வேண்டியது அவசியமாகும். மாண்சான்டோவின் இந்திய விற்பனைப் பிரதிநிதி(!) ஜெய்ராம் ரமேஷ் பி.டி. கத்தரி குறித்து கருத்துக் கேட்க மேற்கு வங்கம், கர்நாடகம் என சென்ற இரண்டு மாநிலங்களிலும் ”அமோக வரவேற்பு” பெற்ற காரணத்தால் தற்காலிகமாக பி.டி. கத்தரிக்கு தடை என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அடுத்த நான்கைந்து நாட்களில் மீண்டும் ஒரு கூட்டத்தில் பேசிய ஜெய்ராம், “பி.டி.கத்தரிக்காயை” கொண்டுவர முதலமைச்சர்கள், வேளாண்துறை விஞ்ஞானிகள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஒத்துழைக்க வேண்டும் என மாநில அரசுகளின் ஒத்துழைப்புக்கு நூல் விட்டுப்பார்த்தார். (பாவம்! அவருந்தான் எத்தன பேர சமாளிப்பாரு!).

இந்நிலையில், “உயிரித் தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம்” என்ற பெயரில் மரபணு மாற்று தொழில்நுட்பம் குறித்து மாற்றுக் குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நசுக்க ஒரு புதிய வரைவு மசோதாவை தயாரித்து அதை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டமாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் அதன் பாதிப்பை ஆய்வின் அடிப்படையில் நிரூபிக்கவில்லை என்றால் ஒரு வருடம் சிறை தண்டனையும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுமாம். மேலும் அமெரிக்க விவசாய நிறுவனங்கள் இந்திய விவசாயத்தில் தலையிடுவதற்கும் இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் அவர்கள் நேரடியாக விவசாயம் செய்வதற்குமான வழியாக “விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு” (யாரோட உணவுக்கு பாதுகாப்புன்னு தெரியல!?) என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. (அதாவது ஏற்கனவே ”சிறப்பு பொருளாதார மண்டலம்” அப்டீன்ற பேர்ல வெளிநாட்டு நாட்டு கம்பெனிகாரன் வளச்சுபோட்டது போக, மிச்சம் மீதி இருக்கிற கொஞ்ச நஞ்ச விவசாய நெலத்தையும் “ஒப்பந்த விவசாயம்” -ங்கிற பேர்ல அமெரிக்காகாரங்கையில கொடுத்து புட்டு உள்ளூர் விவசாயிய மொத்தமா ஓட்டாண்டியாக்குறதுக்கான ஏற்பாடு!)

இப்படியாக மரபணு மாற்ற கத்தரிக்காயை இந்தியாவிற்குள் கொண்டுவர அனைத்து வழிமுறைகளையும் கையாள மத்திய அரசு தயாராகி வரும் நிலையில் மரபணு மாற்ற கத்தரி குறித்து வெளிப்படையாக யாரும் கூறாத புதிய தகவல்களை விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதன்மை அறிவியல் அலுவலர் டி.வி. வெங்கடேஸ்வரன் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மூத்த உயிர் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் முனைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் ஒரு கூட்டத்தில் தெரிவித்தை இங்கு குறிப்பிடுவது மிகவும் அவசியமாகும். அவர்கள், “அறிவியல் ரீதியாக மரபணு மாற்ற தொழில்நுட்பம் என்பது உயிர் தொழில்நுட்பத்தில் ஒன்று என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மரபணு மாற்றக் கத்தரிக்காய் உண்பதால் மலட்டுத் தன்மை உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் என்ற கருத்துக்களுக்கு இதுவரை எவ்வித ஆதாரங்களும்
இல்லை. அதேசமயம் மரபணு மாற்றப் பயிர்களை பயிரிடும் விவசாய நிலங்களுக்கு
அருகில் உள்ள, அதை பயிரிடாத மற்ற விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பது நூறு சதவீதம் உண்மையாகும்.

அது எப்படியெனில் அமெரிக்கா போன்ற நாடுகளி நூறு ஏக்கர், இருநூறு ஏக்கர் என மிகப் பெரிய அளவிலான பண்ணை நிலங்களில் ஒரே மாதிரியான விவசாயப் பொருட்களை மிகப்பெரிய அளவில் (Maas Productioon) உற்பத்தி செய்யும் விவசாய முறை பின்பற்றப்பட்டு வருவதால் அங்கெல்லாம் பி.டி. ரக விவசாய பொருட்கள் பயிரிடுவது ஏதுவாக உள்ளது. ஆனால் சிறு-குறு விவசாயிகளையே அதிகம் கொண்டுள்ள நமது நாட்டில் சிறு விவசாயி ஒருவர் தனது சிறிய அளவிலான நிலத்தில் பி.டி. ரகத்தைப் பயிர் செய்தால் அருகில் உள்ள விவசாயியும் அதே ரகத்தை பயிர் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுவார். (அதாவது ஒரு ஏக்கர் அளவில் பி.டி. ரகம் பயிர் செய்யப்பட்டுள்ள நிலத்தைச் சுற்றிலும் சுமார் முப்பது அடிக்கு வேறெந்த ரகப் பயிர்களையும் பயிரிட முடியாது.) இது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

மேலும் பொருளாதார ரீதியாக பார்க்கும் போது அவ்வாறு பயிர் செய்ய, விவசாயிகள் பெருமளவில் கடன் வாங்கும் சூழல் உருவாகும். இது விவசாயிகளையும் நாட்டையும் பெரும்பாதிப்பிற்குள்ளாக்கும். மேலும் மரபணு மாற்ற ரகங்களைப் பயிரிடுவதன் மூலம் உள்நாட்டு விதை உற்பத்தி பாதிக்கப்பட்டு-நாளடைவில் அழிக்கப்பட்டு, பின் வரும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மாண்சாண்டோவிற்கு வழங்கும் சூழல் உருவாகும். இப்போதே கடந்த 2006-07-ம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 1200 கோடி ரூபாய் வரை அந்நிய விதை உற்பத்தி நிறுவனங்களுக்கு ராயல்டியாக வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது நம் நாட்டிற்கு அவசியமில்லாத ஒரு செயலாகும். எனவே பெருமளவில் சிறு-குறு விவசயிகளைக் கொண்ட நம் நாட்டிற்கு பி.டி. கத்தரிக்காய் ஏற்புடையதாக இருக்காது.” எனக் கூறுகின்றனர்.

பி.டி. கத்தரிக்குப் பின்னால் இவ்வாறான உள்விவகாரங்கள் இருக்க அதைப்பற்றிப் பேசினாலே கழுத்தை நெரிக்க தயாராகிவரும் மத்திய அரசு ‘பிடி கத்தரிக்காய்!’ என பி.டி. கத்தரிக்காயை அனைவரின் வாயிலும் திணிக்க எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் நிலையில் நுகர்வோர்களாகிய நம் நிலை என்ன? என்பதுதான் மக்களாகிய நம் அனைவரின் முன்பாகவும் உள்ள மிகப் பெரிய கேள்விக்குறியாகும்!

6 comments:

  1. நீ யே வளத்து நீயே தின்னுன்னு விட்டா சரியாப் போச்சி. விளைச்சாத்தானே விக்கறதுக்கு. நல்ல பகிர்வு

    ReplyDelete
  2. மிக நீண்ட இடைவெளிக்குப் பின் என் வலைப்பூவில் சிறகடித்துள்ள வானம்பாடிக்கு நன்றிகள்!

    ReplyDelete
  3. dear sasi, i really proud of you, you are done a great job, i know you are the great man and jeneious, you prove your self. congratulations. R. Krishnakumar, Dinamani, Erode.

    ReplyDelete
  4. விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு ..

    ReplyDelete
  5. பழைய இடுகைகள் என்றாலும் படித்து விட்டுப் பின்னூட்டமிட்ட யுக கோபிகாவிற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  6. Dear G.S.K,I stopped eating brinjaal for the past one year. Where ever I go I avoid eating that. when ever I am asked I take it an oppurtunity to explain the harmful effect of its morphological,biological,economic,and social aspect.It must be fought in its political level also......kashyapan.

    ReplyDelete