சமீப காலமாக தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களைச் செய்து வருகின்றன. தமிழ் தொலைக்காட்சிகள் (வித்தியாசம் என்ற பெயரில்) என்னென்னவோ நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதற்கு சத்யராஜ், பிரகாஷ்ராஜ் எல்லாம் வந்துவிட்டார்கள் (அவர்கள் கூறும் வித்தியாசங்களில் இதுவும் ஒன்று!). இந்த நிகழ்ச்சிகளில் 99.9 சதவீதம் வெளிநாட்டுச் சேனல்களில் இருந்து சுடப்பட்டவை என்பது வேறுகதை!
என்னதான் ‘சுட்டுப்’ போட்டாலும் அவர்களின் நேர்த்தியோ நம்பகத்தன்மையோ நம் தயாரிப்புகளில் இல்லை என்பது மட்டும் நிதர்சனம். சரி, விஷயத்திற்கு வருவோம்! கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக பல்வேறு நிகழ்ச்சிகளை FOX CRIME எனும் சேனல் ஒளிபரப்பி வருகிறது. இதில் சமீபமாக இரவு 10 மணிக்கு 1000 WAYS TO DIE எனும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். இதில் மனிதனுக்கு எப்படியெல்லாம் மரணம் சம்பவிக்கிறது என்பதை காட்டுகிறார்கள். உதரணத்திற்கு சில...
ஒரு பார்சல் குடோனை கடந்து செல்லும் இளைஞன் ஒருவன் திறந்து கிடக்கும் காம்பவுண்ட் கேட்டை பார்க்கிறான். காம்பவுண்டிற்குள் சற்று தள்ளி எல்.சி.டி. டி.வி-க்கள் கொண்ட அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அங்கே ஆட்கள் இருப்பதற்கான அறிகுறி தென்படாததால் மெதுவாக உள்ளே நுழையும் அவன் ஒரு எல்.சி.டி. டி.வி பெட்டியை எடுக்கிறான். அப்போது திடீரென அங்கு வரும் காவலாளி அவனைப் பார்த்து சத்தம் போடுகிறான். உடனே எங்கிருந்தோ மற்றொரு காவலாளியும் வந்து விடுகிறான். யாருமே இல்லையென நினைத்த இடத்தில் திடீரென இரண்டு பேர் உதயமானதைக் கண்டு திகைக்கும் அந்த இளைஞன் எக்காரணம் கொண்டும் அவர்கள் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்ற வெறியில் அந்த வளாகத்திற்குள்ளேயே தலைதெறிக்க ஓடுகிறான். அதன் மற்றொரு பகுதிக்கு வந்த அவன் காவலாளிகளின் பார்வையில் படாமல் இருக்க அங்கிருக்கும் குப்பை தொட்டிக்குள் ஏறி ஒளிந்து கொள்கிறான். சில நிமிடங்கள் காத்திருக்கும் நேரத்தில் குப்பைகளை அள்ளிச் செல்லும் லாரி வந்து தனது இரும்புக் கரங்களால் அந்தக் குப்பைத் தொட்டியை தூக்கி தனது முதுகில் உள்ள தொட்டியில் கொட்டிக் கொள்கிறது. இயந்திரத்தின் சத்தத்தில் அவன் அலறல் யாருக்கும் கேட்பதில்லை. உள்ளே குப்பைகளுடன் குப்பையாக விழுந்த அவன் சுதாரிப்பதற்குள் குப்பைகளை அழுத்தி சக்கையாக்கும் அடுத்த இயந்திரம் இயங்க ஆரம்பித்து விடுகிறது. அது அவனை அப்படியே நசுக்க ஆரம்பிக்கிறது.
இப்போது அந்த நிகழ்வை அப்படியே முப்பரிமாண நிலையில் காண்பிக்கிறார்கள். அது சம்பந்தமான ஸ்பெஷலிஸ்ட் ஒருவரும் திரையில் தோன்றி முதலில் உடம்பில் எந்த பாகம் உடையும் அதன் பிறகு என்னென்ன நடக்கும் என்பதை விவரிக்கிறார். பின் நிஜமாகவே அந்த இயந்திரத்திற்குள் மாட்டியவன் நசுக்கப்படுவதைக் காண்பிக்கிறார்கள்.
இதில் மிகவும் சுவாரசியம் என்னவென்றால், இதுபோல் ஒரு நிகழ்வு ஏற்படும்போது நிச்சயமாக அதைப் படமாக்க முடியாது என்பதுதான். ஏனென்றால் அவை எல்லாமே திடீரென எதேச்சையாக நடக்கும் நிகழ்வுகளாகவே இருப்பதும், அவை படமாக்கப்பட்டிருக்கும் விதம் உங்களுக்கு எவ்விதக் கேள்விகளை எழுப்பாது என்பதும்தான் இதில் சுவாரசியத்திலும் சுவாரசியம்!
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...
No comments:
Post a Comment