Saturday, June 18, 2011

தூக்கம் கலைத்த திரைப்படம்!

வழக்கம்போல் நேற்றிரவு சேனல்களில் மேய்ந்து கொண்டிருந்தபோது சூர்யா டி.வி-யில் மம்முட்டியும் அவரது நண்பரும் தண்ணியடித்துக் கொண்டிருந்தார்கள். ஏனோ தெரியவில்லை தன்னிச்சையாக அடுத்த சேனலுக்கும் தாவ உதவும் விரலின் இயக்கம் சன்று தடைபட்டது. அதற்கு காரணம் மம்முட்டியின் கெட்டப்பா அல்லது அப்போது ஒலித்த கதை சொல்லியின் குரலா எனத் தெரியவில்லை. இருவரும் ஓலையால் வேயப்பட்டு மர பெஞ்சுகள் போடப்பட்டிருந்த ஒரு சிறு தடுப்பில் அமர்ந்து தண்ணியடித்தபடி பேசிக்கொண்டிருக்க பின்னால் குரல் ஒலிக்கிறது. திரையில், வீட்டின் முற்றத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் சடலத்தின் அருகில் ஒரு சிலரே கூடி நிற்க மம்முட்டி கையில் வைத்திருக்கும் கிடாரை இசைத்தபடி போதையில் குளறியபடி கர்ண கொடூர குரலில் பாட ஆரம்பிக்கிறார். அருகில் இருக்கும் - சடலத்திற்கு அவர் மகனாக இருக்கலாம்- ஒருவர் மம்முட்டியை ஒரு மாதிரியாக பார்க்கிறார். இரண்டாவது வரி பாட யத்தனிக்கும் போது மம்முட்டியை அவர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிளுகிறார். வெளியே தள்ளப்பட்ட மம்முட்டி திரும்பித் திரும்பி பார்த்தபடியே நடக்க கதை சொல்லியில் குரல் ஒலிக்கிறது. எனக்கு லேசாக கண்ணைச் சுழட்டிய தூக்கம் கலைந்து திசை மாறிப் படுத்து பார்க்க ஆரம்பித்தேன்.

அடுத்த காட்சியில் அவரும் அவரது நண்பரும் மீண்டும் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறார்கள். குரல் கதையை நகர்த்திச் செல்கிறது. அடுத்த காட்சி தென்னை மரம் ஒன்றில் REPAIR HOME என எழுதப்பட்ட பலகை தொங்கிக் கொண்டிருக்க மம்முட்டி ஒரு பழைய சைக்கிளை தட்டி சரி செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அவரது நண்பர் பெயர் பலகையை பார்த்து விட்டு படிக்க முயற்சித்து மலையாளத்தில் எழுத வேண்டியது தானே எனக் கூற, மம்முட்டி ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டு அதுவும் கீழே எழுதியுள்ளது எனக் கூற அதைப் படிக்கவும் அவர் படும் சிரமம் அருமை!

அப்போது அவருக்கும் அவரது நண்பருக்கும் நடக்கும் சம்பாஷணைகளின் பின்னணியில் மீண்டும் கதை சொல்லியின் குரல் ஒலிக்க மம்முட்டி தனது கிடாருடன் ஒரு பாதிரியாரைப் போய் பார்க்கிறார். அவர் அவரிடமிருந்து கிடாரை வாங்கிக் கொண்டு சாக்ஸ்போன் ஒன்றைக் கொடுத்து, இதைக் கற்றுக் கொண்டு பெரிய சங்கீதக்காரனகாக நீ வரவேண்டும் என்கிறார். உடனே அதை ஏற்றுக் கொண்டு செயலில் இறங்கும் மம்முட்டிக்கு திருமண நிகழ்ச்சிகளில் வாசிக்க மட்டுமே வாய்ப்புகள் அமைகிறது. அப்படி ஒரு திருமண நிகழ்ச்சியில் வாசித்துக் கொண்டிருக்கும் போது மணப் பெண்ணின் தோழிக்கும் மம்முட்டிக்கும் பிரேமம் உண்டாகி விடுகிறது. இப்போது கதை சொல்லியின் குரல் பின்னால் ஒலிக்க மணமேடையில் மணமக்களுக்கு இடது புறத்தில் நின்று வாசித்துக் கொண்டிருந்த மம்முட்டி வாசிப்பை நிறுத்திவிட்டு காட்சி மாறாமல் அப்படியே நிற்க மணமக்களின் இடது புறத்திற்கு வந்து வாசிக்க ஆரம்பிக்க கேமரா சற்று முன்னோக்கி வர மணப்பெண்ணாக, சென்ற காட்சியில் மம்முட்டியின் வாசிப்பிற்கு மயங்கி காதலில் விழுந்த அந்தப் பெண் நிற்கிறாள் வேறொருவனின் மனைவியாக!

இப்படியாக சிறிது காமெடியும் கண்கலங்கல்களுமாக நகரும் டேனி என்ற அந்தக் கதாப்பாத்திரத்தின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. 1930-ல் பிறந்து 2000-ம் ஆண்டுவரை வாழ்ந்த டேனி தாம்ப்ஸன் எனும் மனிதனின் வாழ்வைப் பதிவு செய்திருக்கிறது அந்தப்படம். பின்புலத்தில் அந்தந்த காலகட்ட அரசியல் நிகழ்வுகளையும் பதிவு செய்திருப்பது இப்படத்தின் – இயக்குநரின் தனிச் சிறப்பு. சில படங்கள் பார்க்கும் முதல் பிரேமிலேயே மொழிபேதங்களைத் தாண்டி உங்களைக் கட்டிபோட்டுவிடும் தன்மையைக் கொண்டிருக்கும். இப்படம் அவ்வகையைச் சார்ந்தது. பொதுவாக மலையாளத் திரைப்படங்கள் அப்படித்தான் – ஒரு காலத்தில்! இப்போது தமிழக தொழில்நுட்பமும் ஆந்திர கதையம்சமும் தான் அங்கு ஆட்டிப்படைக்கிறது.

பாடல்கள் சண்டைக் காட்சிகள் இன்றி தொடர்ந்து இரண்டு மணிநேரத்தை சர சரவென நகர்த்திச் செல்லும் கதையும் திரைக்கதையும் அதற்கேற்ற நடிகர்களுமாக ‘டேனி’ என்ற இத்திரைப்படம் நான் சில வருடங்களுக்குப் பின் இறுதிவரை பார்த்த திரைப்படம்! மம்முட்டியை தவிர எந்த நடிக-நடிகையர் பெயரும் எனக்குத் தெரியவில்லை. நான் பார்க்கும் போது முதலில் கொஞ்சம் படம் ஓடிவிட்டது. இறுதியில் A Film By T.V. Chandran என டைட்டில் கார்டு போட்டார்கள். டி.வி.யை அனைத்து விட்டு படுக்கையில் விழுந்து வெகு நேரமாகியும் உறக்கம் வரவில்லை!

2 comments:

  1. அரிய சுவையான பதிவு.
    பல மலையாளப் படங்கள் நம்மை இப்படி இழுத்து விடும், ஈடுபாடு கொள்ளச் செய்து விடும்.

    ReplyDelete
  2. எனது வலைப்பூவிற்கு புதிதாக வருகை தந்து மறுமொழியிட்ட ராம்ஜிக்கு நன்றிகள் பல.

    ReplyDelete